ட்ரெண்டிங்

பட்டாசுகளை வெடிக்கும் சிறுவர், சிறுமிகளின் கவனத்திற்கு!- விரிவான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

 

நாளை (நவ.12) தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைவரும் பட்டாசுகளைப் பாதுகாப்பான முறையில் வெடித்து விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட சேலம் மாவட்ட தீயணைப்புத் துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன், பட்டாசுகளைப் பாதுகாப்புடன் வெடிப்பது தொடர்பான வழிமுறைகளையும், பட்டாசு வெடிக்கும் போது தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அவற்றை விரிவாகப் பார்ப்போம்!

 

பட்டாசுவெடிக்கும் போது, பட்டாசுகளை கைகளில் வைத்துக் கொண்டு வெடிக்கக்கூடாது. சிறுவர், சிறுமியர்களிடம் பட்டாசு மற்றும் மத்தாப்புகளைக் கொடுத்து வெடிக்கச் செய்யும் போது, பெரியவர்கள் முன்னிலையில் வெடிக்க செய்ய வேண்டும்.

 

வீட்டிற்குள் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. மிகவும் தளர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு, மத்தாப்பு கொளுத்தக்கூடாது. பட்டாசுகளை கண்ணாடி பாட்டில்கள் மற்றும் தகர டப்பாக்களைக் கொண்டு மூடிவைத்து வெடிக்கக்கூடாது. இது ஆபாத்தான செயலாகும்.

 

சமையலறையில் பட்டாசுகள் வைத்தல் கூடாது. பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தீக்காயங்களுக்கு குளிர்ந்த நீரை தீக்காயத்தின் மீது உடனடியாக ஊற்ற வேண்டும். குழந்தைகளை எரியும் சிம்னி விளக்கில் பட்டாசுகளை கொளுத்த விடாதீர்கள். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கையில் எடுக்கக்கூடாது. அது மீண்டும் வெடிக்கும் அபாயம் கொண்டதாகும்.

 

மண்ணெண்ணெய், பெட்ரோல் பங்க், ஆயில் கடையருகில் பட்டாசுகளை வெடிக்கச் செய்தல் கூடாது. மக்கள் அதிக அளவில் கூடும் கடை வீதிகளில் பட்டாசு, வாணவெடிகள் வெடிக்கக்கூடாது. அது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

 

பட்டாசு வெடிக்கும் போது குனிந்து கொண்டும், முகத்தின் எதிரே வைத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.