ட்ரெண்டிங்

சேலத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்.20) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

வரும் செப்டம்பர் 21- ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

செப்டம்பர் 22- ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் இதர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டியில் 4 செ.மீ. மழையும், சேலம் மாநகரில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது". இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது