ட்ரெண்டிங்

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை- சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு!

கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து சேலம் கூடுதல் இரண்டாவது அமர்வு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வரும் பாபு என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கொல்லப்பட்டி குமார் (எ) குமார் (வயது 54) குடும்பத்திற்கும் சுமார் ஐந்து வருடத்திற்கு முன்பு பாபு வீட்டிற்கு எதிரில் உள்ள நிலத்தில் வீடு கட்டியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 2017- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06- ஆம் தேதி குமார் பாபுவை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தனது வீட்டிற்கு வரவழைத்து குமாரின் நண்பர்களான பிரேம் குமார் (வயது 30), ரமேஷ் (வயது 41), குட்டி (வயது 31), தியாகராஜன் (வயது 33), ரஞ்ஜீத் குமார் (வயது 30), முரளி செல்வம் (வயது 27), இளவரசன் (வயது 27), கோபால கிருஷ்ணன்(வயது 30), வினோத்குமார்(வயது 34) ஆகியோர்களின் உதவியுடன் ஒன்பது பேரும் ஒன்று சேர்ந்து பாபுவைக் கடத்திக் கொண்டு ஊரக உட்கோட்டம், ஏற்காடு காவல் நிலைய எல்லை, உயிரியல் பூங்கா பகுதிக்கு கடத்தி சென்று பாபுவை கழுத்தை அறுத்து மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

 

 

இது சம்மந்தமாக ஏற்காடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தன், ஏற்காடு காவல் நிலையத்தில் சட்டபிரிவு 147,148,364,302, 120 (பி),149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து, கடந்த 2017- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09- ஆம் தேதி அன்று அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இவ்வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து வழக்கானது சேலம் கூடுதல் இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நேற்று (செப்.15) இவ்வழக்கில் நீதிபதி ரவி தீர்ப்பளித்துள்ளார்.

 

அந்த தீர்ப்பில், கொல்லப்பட்டி குமார் (எ) குமார், பிரேம் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி, அவர்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 7 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

விரைந்து தீர்ப்புக் கிடைக்க காரணமாக இருந்த காவல் ஆய்வாளர் செந்தில்ராஜ்மோகனை காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன். இ.கா.ப. பாராட்டினார்.