ட்ரெண்டிங்

சுபமுகூர்த்த நாட்கள், ஓணம் பண்டிகையையொட்டி, சேலத்தில் பூக்களின் விலை உயர்வு!

சேலம் மாநகர பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது வ.உ.சி. மார்க்கெட். கன்னங்குறிச்சி, வீராணம், பனமரத்துப்பட்டி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர். 

ஆவணி மாதம் பிறந்த நிலையில், சுபமுகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளன. அந்த வகையில், இன்றும் (ஆகஸ்ட் 20), நாளையும் (ஆகஸ்ட் 21) சுபமுகூர்த்த நாட்கள் என்பதால், ஏராளமான திருமணங்கள் நடைபெறவுள்ளன. அதேபோல், ஓணம் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் காலமே உள்ள நிலையில், பூக்களின் விலை உயர்ந்துள்ளது. 

குண்டுமல்லி கிலோ 600 ரூபாய்க்கும், சன்னமல்லி 500 ரூபாய்க்கும், முல்லை 400 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 280 ரூபாய்க்கும், காக்கட்டான் 200 ரூபாய்க்கும், கலர் காக்கட்டான் 160 ரூபாய்க்கும், மலைக்காக்கட்டான் 200 ரூபாய்க்கும், அரளி 150 ரூபாய்க்கும், வெள்ளை அரளி 200 ரூபாய்க்கும், மஞ்சள் அரளி 200 ரூபாய்க்கும், செவ்வரளி 200 ரூபாய்க்கும், ஐ.செவ்வரளி 170 ரூபாய்க்கும், நந்தியாவட்டம் 100 ரூபாய்க்கும், சி.நந்திவட்டம் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

விலை உயர்வுக் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகை நாட்கள் நடைபெறவிருப்பதால், பூக்களின் விலை மேலும் உயருமே தவிர, விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என்று பூக்கடை வியாபாரிகள் கூறுகின்றனர்.