ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை
சேலம்: டீசல், உதிரி பாகங்கள் மற்றும் சுங்கக் கட்டணங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப, தனியார் பேருந்துகளின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அரசின் முடிவுக்காக 30 நாட்கள் காத்திருப்பதாகவும், அதற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் வரும் 2-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பெண்கள் இலவசமாக பயணிக்கும் ‘வெற்றி மகளிர் பயணம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் தனியார் பேருந்துகளுக்கு நஷ்டம் ஏற்படும் எனக் கூறி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்கும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 350 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. அப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.64-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.100-ஐ தாண்டியுள்ளது. இதேபோல் உதிரி பாகங்கள் மற்றும் சுங்கக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.
எனவே, தற்போது கிலோமீட்டருக்கு 58 காசுகளாக உள்ள பேருந்து கட்டணத்தை ரூ.1.10 ஆக உயர்த்த வேண்டும். மேலும், பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பயணத் திட்டத்தை தனியார் பேருந்துகளிலும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததாகவும் ரவீந்திரன் தெரிவித்தார்.
இதனால், தற்போது போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், “அரசின் முடிவுக்காக 30 நாட்கள் காத்திருப்போம். அதற்குப் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நிச்சயமாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். டீசல், உதிரி பாகங்கள், சுங்கக் கட்டண உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தையும் ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும்” என தெரிவித்தார்.



-hcTFAGMRGb.jpg)