ட்ரெண்டிங்

சேலம் மக்களுக்காக உயிருள்ளவரை போராடுவேன்” – மேயர் ராமச்சந்திரன்

 

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் இன்று காலை முதல் உள்ளிருப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாமாங்கம் அருகே ரூ.297 கோடி மதிப்பில், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து தரம் பிரித்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும் என மேயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வ.உ.சி. பூ மார்க்கெட் ஏலம் தொடர்பான முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் தனிக்குடிநீர் திட்டத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை ரத்து செய்ய வேண்டும், ஆத்தோரம் மார்க்கெட் பகுதியில் ஏலம் முடிந்த பின்னரும் பணம் வசூலிக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யா நீலம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டிய மேயர், அவரை கண்டித்தும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் திமுக மற்றும் விசிக கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில், அதிமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ராமச்சந்திரன், சேலத்தில் 5 மாவட்டங்களின் குப்பைகளை கொண்டு வந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாநகராட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மற்றும் அவருடன் வந்ததாக கூறப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

“எனக்கு 83 வயதாகிறது. உயிருள்ளவரை சேலம் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்” என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.