ட்ரெண்டிங்

சேலம் -நீட் மறுதேர்வு அச்சம்; மாணவி தூக்கிட்டு தற்கொலை !

 

 

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி கோபிகா (20), நீட் மறுதேர்வு நடைபெற இருந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபிகா, 2024-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்வை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பில் சேரும் நோக்கில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். வருகிற 21-ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் மறுதேர்வை எழுதுவதற்காக உறவினர் வீட்டில் தங்கி தீவிரமாக படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாததால் பெற்றோர் நேரில் சென்று பார்த்தபோது, மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொங்கணாபுரம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை.

இதுகுறித்து மாணவியின் தந்தை சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

“கடந்த நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும், இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் என் மகள் இருந்தார். தேர்வில் வெற்றி பெறாவிட்டாலும் மாற்று கல்வி வாய்ப்புகளுக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தேன். ஆனால் அதற்குள் இவ்வாறான முடிவை எடுத்துவிட்டார்.

நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே பல மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களை செய்திகளில் பார்த்திருக்கிறோம். அதனால் எனது மகளையும் மிகவும் கவனமாக பார்த்து வந்தோம். இரண்டு நாட்களுக்கு முன்புதான் தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார். ஆனால் ஒரு நொடியில் எடுத்த தவறான முடிவு எங்கள் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தனது துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.

இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் நிலவும் தேர்வு அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.