சேலம்- சென்னை விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.
சேலம் விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம், உடான் திட்டத்தில் சேலம்- ஹைதராபாத், சேலம்- பெங்களூரு ஆகிய பயணிகள் விமான சேவையை இயக்கி வருகிறது. உடான் இல்லாத திட்டத்தின் கீழ் சேலம்- சென்னை விமானம் இயக்கப்படுகிறது.
தற்போது கோடைக்கால அட்டவணையின்படி, விமானம் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய கிழமைகளில் சேலத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம் மதியம் 12.55 மணிக்கு புறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய கிழமைகளில் சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் விமானம் மதியம் 02.20 மணிக்கு புறப்படுகிறது. தினந்தோறும் சென்னையில் இருந்து மதியம் 03.50 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 05.00 மணிக்கு சேலம் வந்து மீண்டும் 05.20 மணிக்கு புறப்பட்டு மாலை 06.30 மணிக்கு சென்னையில் தரையிறங்குகிறது.


