நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவையினை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஆகஸ்ட் 27) தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னையில் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை துவக்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தில் தற்போது சேலம் மாவட்டத்திற்கு 12 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் சேலம் மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களுக்கும், கால்நடை மருந்தகங்கள் இல்லாத கிராம பகுதிகளுக்கும், கால்நடை மருத்துவ சேவைகளை அந்தந்த இடத்திலேயே வழங்கிடவும், அப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் நோக்கத்துடன் துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல், ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஆய்வு, சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை, கால்நடை மருத்துவ முகாம்களில் கலந்துகொள்ளுதல், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பங்கேற்று உதவுதல் போன்ற
சேவைகள் மேற்கொள்ளப்படும்.
இந்நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் காலை 08.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை குறிப்பிடப்பட்ட வழித்தடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான சேவைகள் வழங்கவும், மாலை 03.00 மணி முதல் 05.00 மணி வரை 1962 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொண்டால், அழைப்புகளை ஏற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சேவையை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.பாரதி, துணை இயக்குநர் மரு.பாபு, துணை ஆட்சியர் (பயிற்சி) மாருதி பிரியா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



