ட்ரெண்டிங்

பிடிபட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை....காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம்! 

சேலம் எடப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை நடைபெற்ற வருவதாக தொடர் புகார் எழுந்தது. இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி காவல்துறையினர், எடப்பாடி புறநகர் சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது சோதனையில் பிடிபட்ட குட்கா மூட்டைகளில் ஒரு சிலவற்றை சோதனையில் ஈடுபட்ட போலீசார் வெளிச்சந்தையில் விற்பனை செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மற்றொரு குழுவினர் எடப்பாடி ரிங் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் 2 மூட்டைகளில் குட்கா பொருட்களை கடத்தி வருவதைக் கண்டு, அவரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த இளைஞர், குட்கா மூட்டைகளை எடப்பாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜா, குணசேகரன் உள்ளிட்ட 2 காவலர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியதாகத் தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் மற்றும் பணியிலிருந்த காவல் துணை ஆய்வாளர் (எஸ்.ஐ) ஐயப்பன் ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

சோதனையில் பிடிபட்ட குட்கா பொருட்களை காவல்துறையினரே வெளிச்சந்தையில் விற்பனை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.