ஆன்மிகம்

கோட்டை மாரியம்மன் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.... ஆடிப் பண்டிகைக்கான ஏற்பாடுகள

சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. சேலத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்ற மக்கள், ஆடிப் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்து தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டிற்கான விழாவிற்கான பட்டியலை அந்த கோயிலின் செயல் அலுவலர் அமுதசுரபி வெளியிட்டுள்ளார். 

அதன்படி, வரும் ஜூலை 25- ஆம் தேதி அன்று இரவு 08.00 மணிக்கு கோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டுதலுடன் ஆடிப் பண்டிகைத் தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 7- ஆம் தேதி இரவு 08.00 மணிக்கு சக்தி அழைப்பும், ஆகஸ்ட் 9, 10, 11 ஆகிய தேதிகளில் பொங்கல், மாவிளக்கு மற்றும் பிரார்த்தனையும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பால் குட அபிஷேகம், மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோட்டை மாரியம்மன் கோயிலின் அறிவிப்பைத் தொடர்ந்து, அம்மாப்பேட்டை ஸ்ரீ செங்குந்தர் மாரியம்மன் கோயில் மற்றும் குகை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களிலும், ஆடிப் பண்டிகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

சேலம் மாவட்டத்தில் ஆடிப் பண்டிகை ஒரு வார காலம் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.