ட்ரெண்டிங்

பேருந்து ஓட்டுநரை கைது செய்தது காவல்துறை! 

சேலம் அருகே சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம்- அரூர் நெடுஞ்சாலையில் சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே லாரி ஒன்று வேகத்தடையை மெதுவாக கடந்து கொண்டிருந்துள்ளது. அதன் பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்களில் இரண்டு குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது, ஆச்சாங்குட்டப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வேகமாகச் சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனங்களின் மீது மோதியது. 

இதில் இருசக்கர வாகனங்களில் இருந்த இரண்டு வயது குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த 10 மாத பெண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 

விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான சுக்கம்பட்டி காந்திநகரைச் சேர்ந்த ஓட்டுநர் ரமேஷை வீராணம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.