ட்ரெண்டிங்

சிலையை பார்க்க கஷ்டமா இருக்கு!

முருகன் என்றால் அழகு; ஆனால் அதற்கு பொருத்தமே இல்லாமல் அமைக்கப்பட்ட முருகன் சிலையால் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. முருகன் சிலையை அமைத்த ஸ்தாபகர், அழகு முகத்துடன் சிலை வடிவமைக்கப்பட்டதுடன் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவித்துள்ளார். 

சேலத்தில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள அணைமேடு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் திருக்கோயில். இந்த கோயிலை நிறுவி பராமரித்து வரும் ஸ்தாபகர் வெங்கடாசலம், மலேசியாவில் இருப்பதைப் போல கோயிலுக்கு முன்பகுதியில் முருகனுக்கு மிகப்பெரிய சிலையை அமைத்துள்ளார். 

தாமரை வடிவ பீடத்துடன் சேர்ந்து 76 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டிருந்தது. வரும் மே 19- ஆம் தேதி ஸ்ரீ ராஜமுருகன் கோயிலுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சிலை அமைக்கும் பணிகள் அவசர கதியில் முடித்ததைப் போல், சிலையில் முருகன் முகம் அழகும், வசீகரமும் இல்லாமல் இருந்தது. 

சிலையைப் பார்த்த பலர், இப்படியொரு சிலை அவசியம் தானா என கேள்வி எழுப்பினர். சமூக வலைதளங்களிலும் இதற்கு விமர்சனம் எழுந்த நிலையில், முருகப் பக்தர்களும் தங்களது அதிருப்தியைப் பதிவுச் செய்திருந்தனர். 

இதையடுத்து சிலையை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ள ஸ்தாபகர் வெங்கடாஜலம், கட்டுமான பணிகள் முடிந்து முருகனின் முகத்தைப் பார்த்ததும், திட்டமிட்டபடி சிலை வடிக்கப்படாததால் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளேன் என்றார். 

முருகன் சிலையின் முகத்தைச் சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. முருகனின் முகம் குழந்தை முகமாக மாற்றப்படும் என ஸ்தாபகர் வெங்கடாசலம் கூறியிருக்கும் நிலையில், குழந்தை முருகன், அழகு முருகனாக இருக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.