ட்ரெண்டிங்

காவல்துறையினருக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி! 

மக்களவைத் பொதுத்தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் இ.ஆ.ப., தேர்தல் காவல் பார்வையாளர் உஷாராதா ஆகியோர் முன்னிலையில், மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஏப்ரல் 13) நடைபெற்றது.

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 1,275 வாக்குச்சாவடி அமைவிடங்களில் 3,260 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள பல்வேறு நிலையிலான அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கான உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் 1,275 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ள பல்வேறு நிலையிலான காவல் துறையினருக்கு கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.


குறிப்பாக சேலம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கென ஏற்கனவே மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினர், பிற மாநில காவல்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என சேலம் மாநகர பகுதிகளில் உள்ள 359 வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு 2,223 காவல் துறையினரும், ஊரக பகுதிகளில் உள்ள 916 வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு 3,409 காவல்துறையினரும் என 
மொத்தம் 5,632 காவல்துறையினர் மேற்குறிப்பிடப்பட்ட 1,275 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினரின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரித்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சேலம் மாவட்டத்தில் மக்களவைத் பொதுத் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் இ.கா.ப., மாநகர துணை காவல் ஆணையாளர்கள் பிருந்தா இ.கா.ப., மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.