ட்ரெண்டிங்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

 

சேலத்தில் சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

 

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி 15- ஆம் தேதி முதல் பிப்ரவரி 14- ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்ற கருப்பொருளை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

 

அதன் தொடர்ச்சியாக, சாலை பாதுகாப்பு குறித்து சேலம் மாநகர காவல்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று (ஜன.31) நடைபெற்றது. சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை காவல் துணை ஆணையாளர் பிருந்தா கொடியசைத்து துவக்கி வைத்தார். 

 

 

இதில் மாநகர காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத் துறையினர் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு அடிவாரம் வரை ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்கி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.