சேலம் மாவட்டம், வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 25). இவர் கோழிப்பண்ணை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சிங்காரவேலுவுக்கும், வெள்ளியம்பட்டி, பள்ளிக்காடுப் பகுதியைச் சேர்ந்த மோனிஷா (வயது 23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் ஆனது.
இந்த நிலையில், ஆடி 18 மற்றும் திருவிழாவையொட்டி, மோனிஷா தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர், தனது கணவரின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துக் கொண்டார்.
மோனிஷாவின் சடலம் கிணற்றில் மிதந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிங்காரவேலு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். திருமணமாகி சுமார் 45 நாட்களே ஆன நிலையில், மோனிஷா உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், மோனிஷாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாகவும், அதனால் கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, திருமணமாகி ஓராண்டு நிறைவடையாத நிலையில், புதுமணப் பெண் உயிரிழந்த வழக்கை, ஆர்டிஓ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.



