ட்ரெண்டிங்

பஞ்சு மிட்டாய் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை!

 

பஞ்சு மிட்டாயில் ரசாயனம் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பஞ்சு மிட்டாய் கடைகள், சாலையோர பஞ்சு மிட்டாய் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்ட பகுதியில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை கடைகள் மற்றும் சாலையோர பஞ்சு மிட்டாய் விற்பனை நிலையங்களில் சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அத்துடன், உணவு மாதிரிகளையும் எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

 

இந்த நிலையில், இன்று (பிப்.12) ரிலையன்ஸ் மால் மற்றும் பெங்களூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மரு.கதிரவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் ஆய்வு செய்த போது சந்தேகத்தின் அடிப்படையில் பஞ்சு மிட்டாயின் மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். மேற்படி உணவு மாதிரி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.